LTC Cash Voucher Scheme: 'வரப்போகும் பண்டிகை'... 'மத்திய அரசின் தீபாவளி பரிசு'... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணமாக ரூ. 10,000 வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாகப் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரிசெய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், நுகர்வோர் வாங்கும் திறனை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருவதாகக் கூறியுள்ளார்.

அந்த வகையில், 7 ஆவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் கொடுக்கும் வசதி இல்லாத சூழ்நிலையிலும், நடப்பு ஆண்டில் மட்டும் நுகர்வோரின் திறனை அதிகரிக்க முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனைப் பயன்படுத்தி 12%-க்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ரூபே கார்டில் இந்த பணம் செலுத்தப்படும். மாதம் ரூ. 1,000 வீதம் 10 மாதங்கள் தவணையாகச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

இதன் மூலமாக 19,000 கோடி ரூபாய் கூடுதலாகப் பொருள்கள் வாங்கப்படும். மாநிலங்களும், தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசுடன் கைகோர்க்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். மேலும் உள்கட்டமைப்புக்காக மாநிலங்களுக்கு 12,000 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும். இதனைத் திருப்பிச் செலுத்த மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்