ஏப்ரல் 14-க்கு பின்னரும்... 'ஊரடங்கு' தொடர வாய்ப்பு உள்ளதா?...பிரதமர் மோடியின் 'மனநிலை' இதுதான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் அதற்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிக்கை ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக இன்று ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பண்டோபாத்யாய், சிவசேனா சார்பில் சஞ்சய் ரவுத், சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் எஸ்.சி.மிஸ்ரா, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான பொருளாதார இழப்பு மற்றும் அதனை சரிசெய்வது குறித்தும் மோடி ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை மோடி கோரியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய மோடி ஏப்ரல் 14-க்கு பின்னரும் ஊரடங்கு தொடரும் என்றும், அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது என்றும் பரிந்துரை செய்திருக்கிறார். மேலும் இதுகுறித்து பேசிய மோடி, ''அரசாங்கத்தின் முன்னுரிமை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதாகும். அதனால் கடுமையான முடிவுகளை அவசியமாக்கியுள்ளது, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரியாக இருக்காது.வரவிருக்கும் காலம் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்றே இருக்கும்.

ஊரடங்கை நீக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நான் மீண்டும் முதல்வர்களுடன் பேசுவேன். ஆனால் இப்போதைக்கு, முழு ஊரடங்கை நீக்குவது சாத்தியமில்லை என்பதே மனநிலை. முழு உலகமும் நெருக்கடியில் உள்ளது.  செல்வந்தர்களும் மிக நவீன அமைப்புகளும் கூட இந்த கொடிய வைரஸுக்கு முன் விழுந்துவிட்டன. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அனைத்து நாடுகளும் தற்போது ஊரடங்கு மற்றும் சமூக விலகலில்  கவனம் செலுத்துகின்றன. கொரோனாவை சமாளிக்க இந்த இரண்டு வழிகள் தான் உள்ளன,'' என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த வாரம் ஊரடங்கு தொடர்பான முக்கிய முடிவொன்றை பிரதமர் மோடி எடுக்கவிருக்கிறார். அதற்கு முன்பு வருகின்ற சனிக்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வழியாக மீண்டும் ஒரு சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். அப்போது ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்