4-ம் கட்ட 'ஊரடங்கு' கண்டிப்பா இருக்கும் ஆனா... பிரதமர் மோடியின் 'புதிய' அறிவிப்புகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதால் 4-ம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்துமா? இல்லை ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவிவந்தது.

இந்த நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்ட முறையில் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ''கொரோனா மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகை இந்தியா வழிநடத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

21-வது நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்பதை நிரூபிக்கவேண்டிய நேரம் இது. இந்தியா மிகச்சிறப்பாக செயலாற்றும் என உலகம் இப்போது நம்புகிறது. மனிதகுலத்தின் நலனுக்கு நம்மால் பெரிய பங்களிப்பு அளிக்கமுடியும். இந்தியாவின் வளர்ச்சியில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன. பொருளாதாரம், உட்கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். உலக நாடுகளுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்தியா இடம் பெற வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு பணிக்கு வழங்கப்படும். நான்காம் கட்ட ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்படுகிறது. ஆனால், முற்றிலும் மாறுபட்டதாக அது இருக்கும். இதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஊடரங்கு தொடர்பான அறிவிப்பு மே 18-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

3-ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே இருப்பதால் இன்னும் 2 அல்லது 3 நாளில் நிபந்தனைகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கினை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்