'உங்க போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி இருகாங்க'... 'வன்முறை வெடிக்கலாம்'... மத்திய அரசு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாவோயிஸ்ட்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்தத் திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து மேலும் விவசாயிகளைத் திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லைப் பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குர்கான் எல்லைப் பகுதியில் 2,500 போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல பரீதாபாத் எல்லைப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்தத் திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பிக் கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன. இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காலை பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து டெல்லியை இணைக்கும் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் தீவிரப்படுத்த அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்