'லட்சத்தீவ காப்பாத்துங்க ப்ளீஸ்'!.. அரசியல் தலைவர்கள் முதல்... திரைப் பிரபலங்கள் வரை... ஒரே குரல்!.. என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹேஷ்டேக் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி லட்சத்தீவில் என்ன தான் நடக்கிறது?

லட்சத்தீவு வரலாற்று ரீதியாக கேரளாவுடன் அதிகம் நெருக்கம் கொண்டது. அங்கு பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி மலையாளம். கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒரே மாதிரி குணம் கொண்டவர்கள். அதைவிட லட்சத்தீவு மக்களே தங்களை மலையாளிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம்.

கண்ணூர் அரக்கல் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் இரண்டு பகுதிகளும் இப்போதும் நெருக்கமாக உள்ளன. இந்த நிலையில்தான் கேரளாவையும், லட்சத்தீவையும் பிரிக்கும் பணிகளை மத்திய அரசு மறைமுகமாக செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கே பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த இவர் பாஜகவை சேர்ந்தவர். குஜராத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். லட்சத்தீவு சட்டதிட்டங்களை வகுக்க கூடிய அதன் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்தில் இருந்தே அமைதியாக இருந்த லட்சத்தீவு தற்போது சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இவர் அங்கு நிர்வாக பொறுப்பை எடுத்ததில் இருந்தே மலையாளிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் என்று புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக லட்சத்தீவு கப்பல்கள், படகுகள் எதுவும் கேரளாவின் பேய்ப்பூர் துறைமுகத்திற்கு செல்ல கூடாது, மாறாக கர்நாடகாவில் உள்ள மங்களூர் துறைமுகம்தான் செல்ல வேண்டும் என்று பிரபுல் பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது கேரளாவுடன் படகு போக்குவரத்து, வணிக போக்குவரத்தை துண்டிக்கும் விதமாக இந்த உத்தரவு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கேரள மக்கள் லட்சத்தீவில் அதிகமாக இருந்தும் கூட இப்படி ஒரு விதியை வேண்டுமென்றே அவர் திணித்துள்ளார் என்றும், அதேபோல் லட்சத்தீவில் குண்டர் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளார் என்றும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஆனால், இந்தியாவிலேயே குற்றம் நடக்காத ஒரே பகுதி லட்சத்தீவு தான் என்று தரவுகள் கூறுகின்றன.

அங்கு இருக்கும் முக்கிய சிறைகள் கூட காலியாக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அங்கு தேவையின்றி குண்டர் சட்டத்தை கொண்டு வந்து, மக்களை சிறைக்கும் அனுப்பும் திட்டத்தில் பிரபுல் பட்டேல் உள்ளார். லட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக கேரளாவின் முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் புகார் வைத்துள்ளார்.

கேரளா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும், பிரபுல் பட்டேலின் நடவடிக்கைகள் லட்சத்தீவில் அமைதியை குலைக்கும் ஒன்று என்று கூறி உள்ளார். கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் என்று தெரிந்தும் கூட, அங்கு மாட்டுக்கறி விற்பனை மற்றும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு பள்ளிகள் அசைவ உணவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் லட்சத்தீவில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் பிரபுல் பட்டேல் வந்த பின் 6000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவரின் மோசமான நிர்வாகம், பிடிவாதம், அறிவியலை நம்பாத குணம் காரணமாக மக்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதாக கேரள அரசியல் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும், லட்சத்தீவில் இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விசித்திரமான சட்டங்களையும் பிரபுல் பட்டேல் முன்மொழிந்துள்ளார்.

இவரை உடனே திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். எங்கள் லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என்று நடிகர்கள் பிரித்வி ராஜ், கீதா மோகன்தாஸ், சலீம் குமார் போன்ற பலர் மலையாள திரையுலகில் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்