‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லடாக்கில் நடந்த மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவருக்கு கடந்த 17 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் பகுதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் ஓஜாவும் (26) ஒருவர். இவர் கடந்த 2011ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டிற்காக பணியாற்றி வந்தார். 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இவருக்கு கடந்த 17 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தீக்‌ஷா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த குந்தன் குமார், விரைவில் வீடு திரும்புவதாக கூறியுள்ளார்.

எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், நிலைமை சீரான பிறகு மகளை காண வருவதாகவும் மனைவியிடம் உறுதியளித்துள்ளார். சீக்கிரமே வீடு திரும்பி தனது மகளை காண குந்தன் குமார் ஆவலுடன் காத்திருந்திருந்துள்ளார். ஆனால் கடைசியில் குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளை காண வேண்டும் என்ற அவரது ஆசை இறுதிவரை நிறைவேறாமல் போய் விட்டதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவு குறித்து சகோதரர் முகேஷ் என்பவர் கூறுகையில், ‘நாட்டிற்காக எனது சகோதரன் உயிர்தியாகம் செய்துள்ளது பெருமையாக இருக்கிறது. தேவைப்பட்டால், 23 வயதான எனது இளைய சகோதரனையும் எல்லையில் நாட்டிற்காக போராட அனுப்பி வைப்போம்’ என கூறியுள்ளார்.  ராணுவ வீரர் குந்தன் குமாரின் மறைவுக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்