பல மாசம் ‘சம்பளம்’ பாக்கி.. iPhone தயாரிக்கும் ‘பிரபல’ கம்பெனியை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பல மாதங்களாக சம்பளம் தராததால் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பிரபல கம்பெனியை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் தைவானை தலைமையிடமாக கொண்ட ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் (Wistron) என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் பல மாதங்களாக சம்பளம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 2000 ஊழியர்கள் கம்பெனியை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். மேலும் கம்பெனிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், லத்தியால் அடித்து ஊழியர்களை அங்கிருந்து விரட்டினர். இந்த சம்பவத்தில் கார்கள், கணிணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கம்பெனிக்குள் உள்ளே ஒரு அறையில் தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு அதிகரித்தது.

இதனை அடுத்து கம்பெனியை நேரில் ஆய்வு செய்த கோலார் மாவட்ட காவல் துணை ஆணையர் சத்தியபாமா, ‘இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. சம்பளம் தராவிட்டால், தொழிலாளர் நலத்துறை அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து வேலை பார்க்கும் நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்துவது நியாயமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிவித்த இன்ஸ்பெக்டர் சேமந்த் குமார் சிங், ‘முதற்கட்ட விசாரணையில் விஸ்ட்ரான் கம்பெனியில் பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வீடியோ ஆதராங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் செல்போன் தயாரிக்கும் பிரபல விஸ்ட்ரான் கம்பெனியில் சம்பளம் தராததால் ஊழியர்கள் கம்பெனியை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்