லாட்டரியில் விழுந்த பம்பர் பரிசு ரூ.12 கோடி.. ‘யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?’.. கேரளாவில் நடந்த ருசிகரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் லாட்டரி பம்பர் குலுக்கலில் ஒருவருக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்துள்ளது.

கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு 12 கோடி ரூபாய் முதல் பரிசுகொண்ட லாட்டரிகளை அம்மாநில அரசு விற்பனை செய்தது. ஒரு லாட்டரிச் சீட்டு ரூ.300 என்ற கணக்கில் மொத்தம் 33 லட்சம் லாட்டரிச் சீட்டுகளைக் கேரள அரசு அச்சிட்டு விற்பனை செய்தது. இந்த லாட்டரியில் முதல் பரிசு 12 கோடி ரூபாய், இரண்டாம் பரிசு மூன்று கோடி ரூபாய். இதை ஆறு பேருக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், மூன்றாம் பரிசு 60 லட்சம் ரூபாய், ஆறு பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், நான்காம் பரிசு 30 லட்சம் ரூபாயை, ஆறு பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் பிரித்து வழங்கப்படும் என்றும், ஐந்தாம் பரிசாக 108 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (17.01.2021) மதியம் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசுக்கான சீட்டை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் எடுத்தார். அதில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் X G 358753 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது.

நேற்று மதியம் குலுக்கல் முடிந்த நிலையில், இரவு தாண்டிய பின்னரும் 12 கோடி ரூபாய் முதல் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வாங்கியவர் யார் என்பது தெரியவில்லை. இந்த லாட்டரி சீட்டு கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு பகுதியிலுள்ள பரணி ஏஜென்சீஸ் என்ற லாட்டரி விற்பனை நிலையத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் இந்த லாட்டரி சீட்டு விற்பனை ஆகியுள்ளதாக அந்த ஏஜென்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி பரிசு சீட்டில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என கேரள மக்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்