'கேன்சரே இல்லாதப் பெண்ணுக்கு ஹீமோதெரபி சிகிச்சை'... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புற்றுநோய் பாதிக்கப்படாத பெண்ணுக்கு புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கொடசநாடு பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. 38 வயதான இவர், ஒரு துணிக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெற்றோருடன் இருந்து தனது 8 வயது பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். ரஜினிக்கு அண்மையில் மார்பகத்தில் கட்டி போல் ஏதோ இருந்துள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கட்டியின் இரண்டு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துள்ளனர். ஒன்று அவர் அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனையின் ஆய்வகத்துக்கும், மற்றொன்று அரசு மருத்துவமனையில் அருகில் இருக்கும் தனியார் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திசு மாதிரியைக் கொடுத்த ஏழு நாள்களில் தனியார் ஆய்வகத்தின் முடிவுகள் கிடைத்தன. அந்தப் பரிசோதனை முடிவு ரஜினிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகத் தெரிவித்தது.

அதைப் பார்த்த மருத்துவர்களும் ரஜினி உடனடியாக புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தனர். முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகளின் வீரியத்தால் ரஜினிக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. தலைமுடி அனைத்தும் உதிர்ந்து, உடல் பலவீனமடைந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட திசு மாதிரியின் பரிசோதனை முடிவு வந்தது.

அதில் ரஜினியின் மார்பகத்தில் இருந்த கட்டி, புற்றுநோய் கட்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இரண்டாம் கட்ட கீமோதெரபிக்கான தயாரிப்புகள், புற்றுநோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரைகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. கோட்டயம் அரசு மருத்துவமனையில் ரத்தபரிசோதனை கூடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரஜினியின் ரத்தமாதிரி மற்றும் தசைகளை அனுப்பி வைத்தனர்.

அங்கு நடந்த சோதனையிலும் ரஜினிக்கு புற்றுநோய் இல்லை என்று தெரியவந்தது. இல்லாத புற்றுநோய்க்கு மாதக்கணக்கில் சிகிச்சை அளித்ததால் ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

CANCER, DIAGNOSED, KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்