சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் காணாமல் போன பாதிரியார் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் ஜார்ஜ் எட்டுபராயி (57) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிரியாராக பொறுப்பேற்றுள்ளார். தேவாலயப் பணிகளை மேற்கொண்டு வந்த பாதிரியார் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாதிரியாரை சந்திக்க அவரது அறைக்கு மக்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர் அறையில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பாதிரியாரின் செல்போன் அவரது அறையில் இருந்ததை மக்கள் கவனித்துள்ளனர். அவர் அன்றைய தினம் இடமாற்றம் தொடர்பாக மறைமாவட்ட பிஷப்பை சந்திக்க ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த சந்திப்புக்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது’ என தெரித்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் சிசிடிவி கேமரா சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தீவிர சோதனை நடத்தியதில், தேவாலயத்தில் உள்ள கிணற்றில் பாதிரியார் சடலமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே கயிற்றின் மூலமாக கிணற்றில் இருந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

பாதிரியார் ஜார்ஜ் திருச்சபை மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என கூறப்படுகிறது. ஆலப்புழாவில் உள்ள எடத்துவாப் பகுதிதான் இவரது சொந்த ஊராக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தேவாலாயத்தில் நடந்த தீ விபத்தில் சில ஆவணங்கள் எரிந்து விட்டதாகவும், அதில் இருந்து அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனாலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த மாதம் 20 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கான்வென்ட் அருகே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்த நிலையில் பாதிரியர் ஒருவர் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்