கேட்கும்போதே ஈரக்கொலை நடுங்குதே!.. ‘எங்க பஸ்ஸை திடீர்னு தாலிபான்கள் வழிமறிச்சிட்டாங்க’.. ஆப்கானில் சிக்கிய கேரள இளைஞரின் பதபதைக்க வைக்கும் அனுபவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய கேரள இளைஞர், தாலிபான்களிடம் இருந்து தப்பிய சம்பவத்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் திதில் ராஜீவன் (Deedil Rajeevan). இவர் 9 ஆண்டுகளாக ஆப்கானில் வேலை செய்து வந்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, மிகுந்த சிரமங்களுக்கு இடையே தற்போது கேரளா திரும்பியுள்ளனர். காபூலில் இருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து கோவா வழியாக சொந்த ஊரான கண்ணூர் சென்றுள்ளார்.

தாலிபான்கள் வசம் ஆப்கான் சென்றபின் அங்கிருந்த நாள்கள் குறித்து  திதில் ராஜீவன் விவரித்துள்ளார். அதில், ‘கடந்த ஒரு வாரமாக ஆப்கானில் எங்களது வாழ்க்கை மிகவும் பதட்டமானதாகவே இருந்தது. டெல்லிக்கு வந்த பின்னர்தான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். நாங்கள் ஒரு 150 பேர் 6 பேருந்துகளில் காபூல் விமானநிலையம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது நாங்கள் பயணித்த பேருந்துகளை தாலிபான்கள் திடீரென வழிமறித்தனர். அனைத்து பேருந்துகளையும் காலியாக உள்ள இடத்துக்கு அழைத்து சென்று எங்களது ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்டை சரிபார்த்தனர். எங்களது செல்போன்களை வாங்கி சோதனை செய்தனர்.

பெண்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் முதலில் போக அனுமதித்தனர். அதன்பின்னர்தான் இந்தியர்களை விடுவித்தனர். சுமார் 6 மணி நேரம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தோம். தாலிபான்கள் எங்களை பிடித்தபோது எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்தேன். நான் கழிவறைக்கு செல்லும் போதுதான் எனது உறவினருடன் போனில் பேச முடிந்தது. அவரை தொடர்புக்கொண்டு எனது நிலைமையை எடுத்துக் கூறினேன்.

என்னைப்பற்றி மேற்கொண்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் நான் உங்களை விட்டு பிரிந்துவிட்டு என நினைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினேன். மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பி வந்துள்ளேன். இது எனக்கு இரண்டாவது பிறவி என்றுதான் சொல்ல வேண்டும். தாலிபான்கள் பிடியில் சிக்கியது பற்றி அம்மாவுக்கு சொல்லவில்லை. இந்தியா திரும்பியதும்தான் டெல்லியில் இருந்து போன் செய்து பேசினேன்.

தாலிபான்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனக் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தானில் வேலை செய்ய விரும்புபவர்கள் இங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்கின்றனர். ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எல்லோரும் அங்கிருந்து வெளியேறவே விரும்புகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக இருந்த சமயத்திலும் காபூல் பாதுகாப்பானதாகவே இருந்தது. இங்குள்ள நிறுவனங்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருந்தன. அதனால்தான் இங்கு இத்தனை காலம் வெளிநாட்டினர் வேலை செய்து வந்தனர்.

ஆனால் காபூலுக்குள் தாலிபான்கள் திடீரென நுழைந்ததால் வெளிநாட்டினர் இங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் இந்தியா வந்துசேருவதற்கு மத்திய அரசும், கேரள மாநில அரசு, வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உதவியாக இருந்தனர்’ என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்