போலீஸ் வண்டியில அடிக்கடி வந்து விழுந்த கல்...! அதற்கு பின்னாடி இருக்கும் 'நெகிழ' வைக்கும் கதை...! - எனக்கு வேற வழி தெரியல சார்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலை இல்லாத காரணத்தால் எடுத்துள்ள முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் அய்லம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ. 29 வயதான பிஜுவிற்கு கொரோனா பரவல் காலம் முதல் வேலை இல்லாமலும், ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வந்துள்ளார். எங்கு தேடியும் வேலை கிடைக்காத நிலையில், மன விரக்தியில் பிஜு ஆற்றிங்கல் காவல் நிலையம் முன்பு நின்ற போலீஸ் ஜீப் மீது கல் வீசி தாக்கினார்.

இதனைக் கண்ட போலீசார் உடனடியாக பிஜூவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 3 மாத சிறையில் அடைத்தனர். வேலை இல்லாத நிலையில் இருந்த பிஜுவோ சிறையில் இருந்த மூன்று மாதமும் எந்த கஷ்டமும் இல்லாமல் 3 வேளையும் சிறையில் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த பிஜூ, சாப்பாட்டுக்கு என்ன செய்வது என மீண்டும் பல இடங்களில் வேலை தேடினார். ஆனால் அவருக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை.

திரும்பவும் பிஜுவிற்கு சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (27-09-2021) பிஜு மீண்டும் ஆற்றிங்கல் போலீஸ் நிலையம் முன்பு நின்ற ஜீப் மீது கல் வீசி தாக்கினார்.

பிஜுவின் இந்த செயலால் குழப்பமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது பிஜு, 'நான் பல இடங்களில் வேலை தேடி அலைந்து நொந்துவிட்டேன். ஆனால் யாரும் எனக்கு வேலை கொடுக்கவில்லை.

ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளேன். மூன்று மாதமாக  சிறையில் நான் மூன்று வேளையும் சாப்பிட்டேன். சிறைக்கு வெளியே சுகந்திரமாக இருந்தாலும் சாப்பிட்டிற்கு வழி இல்லை.

இதனால் தான் மீண்டும் சிறைக்கு செல்ல இந்த முடிவை எடுத்தேன். அங்காவது மூன்று வேளை சாப்பிட முடியும்' எனக் கூறியுள்ளார்.

பிஜுவின் இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வேறு வழியின்றி அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்