'சபரிமலை விவகாரம்'...'அரை நிர்வாண உடலில் ஓவியம்'... மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கிய 'ரெஹானா பாத்திமா'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'சர்ச்சை நாயகி' எனப் பெயரெடுத்த ரெஹானா பாத்திமா மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நேரத்தில் இவர், கனக துர்கா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்து அப்போது பரபரப்பை ஏற்படுத்தினர். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருவது அவரது வழக்கமாக மாறிவிட்டது. சமீபத்தில் 'பாடி ஆர்ட் அண்ட் பாலிட்டிக்ஸ்' என்ற பெயரில் வீடியோ ஒன்றை ரெஹானா வெளியிட்டிருந்தார்.

அதில் அரை நிர்வாண கோலத்தில் தன் குழந்தைகள் முன் பாத்திமா இருக்க, அவரின் இரண்டு குழந்தைகளும் அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்தனர். மேலாடை இல்லாமல் குழந்தைகள் முன்பு பாத்திமா இருந்த அந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்த நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. பின்னர் நீதிமன்றத்தால் ரெஹானா சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மன்னிப்பு கோரியதால் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து சில நாட்கள் சர்ச்சை எதிலும் சிக்காமல் இருந்த அவர், மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரெஹானா, தான் செய்த மாட்டிறைச்சிக்கு 'கோமாதா உலர்த்தியது' எனப் பெயர் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமைக்கும்போதும் செய்முறையையும் தயாரிப்பையும் விவரிக்கும்போது, மாட்டிறைச்சியை "கோமாதா" என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்தார்.

வழக்கமாக இந்த உணவை ஹோட்டல் மற்றும் வீடுகளில் 'பீஃப் உலர்த்தியது' என அழைக்கப்பட்டு வந்த நிலையில், ரெஹானா பாத்திமாவின் செயல் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், ரெஹானா பாத்திமா கடுமையாக எச்சரிக்கப்பட்டார். 'மேலும் கோமாதா உலர்த்தியது' என்ற வார்த்தையின் தேர்வு தவறான உந்துதல் மற்றும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

இதுபோன்ற மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வீடியோவை பொது பார்வைக்குப் பதிவேற்றுவது பக்தர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கலாம். ஏற்கெனவே ஜாமீனில் உள்ள ரெஹானா பாத்திமாவுக்கு (2018 சபரிமலை வழக்கில் ஜாமீனில் இருக்கிறார்), எந்தவொரு மத சமூகத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்த நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் ஜாமீனை ரத்து செய்ய போதுமான காரணம் இருக்கிறது.

அத்தகைய நடவடிக்கைக்குச் செல்வதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக, எந்தவொரு சமூகத்தின் மத உணர்வுகளையும் தூண்டக்கூடிய பொருள் அல்லது கருத்துகளையும் வெளியிட, பகிர, பரப்ப அல்லது பரப்புவதற்குக் காட்சி அல்லது மின்னணு என எந்த ஊடகங்களை ரெஹானா பாத்திமா பயன்படுத்தக் கூடாது. சபரிமலை வழக்கில் விசாரணை முடியும் வரை பாத்திமாவுக்கு இந்தத் தடை தொடரும்.

ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை 3 மாத காலத்திற்குச் சம்பந்தப்பட்ட நீதித்துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக பாத்திமா அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும் பாத்திமா பங்கேற்ற சமையல் நிகழ்ச்சியின் வீடியோவை வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் தாமஸின் ஒற்றை அமர்வு உத்தரவிட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்