கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற பகுதியில், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் சிறுமியை 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர்.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், இதில் தொடர்புடைய சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் கிரைம் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் கடந்த வாரம் முடிவடைந்தது.
இதில் கைதான 8 பேரில் சிறுவன் மீதான வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை. ஏனெனில் சிறுவனின் வயது தொடர்பான மனு மீதான விசாரணை ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேரும் குற்றவாளிகள் என இன்று காலை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இன்று மாலை குற்றவாளிகளுக்கானத் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஊர்த் தலைவரும் கோயில் பூசாரியுமான சஞ்சி ராம், தீபக் கஜூரியா, பிரவிஷ் குமார் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக தலைமைக் காவலர் திலக் ராஜ், துணைக் காவல் ஆய்வாளர்கள் ஆனந்த் தத்தா, சுரிந்தர் வர்மா ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்