'எம்.பி.-க்கள் நிதியை நிறுத்துவதை ஏற்க முடியாது!'... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்று சிவகங்கை மக்களவை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் அதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால், எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாடாளுமன்ற எம்பிக்களின் அதிகாரத்தை குறைப்பது போலவும், அதிபர் ஆட்சி முறை போன்ற ஒன்றை மறைமுகமாக புகுத்துவதாக உள்ளது. இந்த அரசாங்கம் பிரதமரின் விளம்பரங்களுக்கும், தற்பெருமைக்கும் செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக்கும் விதமாக இருக்கும் இந்த திட்டங்களை நிறுத்தினாலே அதற்கான நிதி கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா எதிரொலியாக பிரதமர் உட்பட எம்பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார்.

குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் சம்பளத்திலும் 30 சதவிதம் பிடிக்கப்படும் என்றும் ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்பிக்களின் சம்பளத்திலும் 30 சதவிதம் பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளக் குறைப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. சம்பள குறைப்பு, தொகுதி நிதி நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு ரூ.7900 கோடி மீதமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்