"தடல்புடல் திருமணம்... தந்தை, தாய் அடுத்தடுத்து 'அதிர்ச்சி' மரணம்..." - மாப்பிள்ளைக்கும் கொரோனா... மரண 'பீதியில்' உறவினர்கள்!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹாவேரியில் வைரஸ் தொற்று பீதிக்கு மத்தியில் திருமணம் நடந்த நிலையில் புதுமாப்பிள்ளையின் தந்தை, தாய் கொரோனாவுக்கு பலியானார்கள். இந்த நிலையில் புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாவேரி மாவட்டம் புறநகர் மாருதி நகரில், 55 வயது நபர் வசித்து வந்தார். இவருக்கு 27 வயதில் மகன் உள்ளார். தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க அந்த நபர் முடிவு செய்தார். இதையடுத்து, கொரோனா பீதிக்கு மத்தியிலும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை அழைத்து கடந்த மாதம் (ஜூன்) 29ம் தேதி தனது மகனுக்கும், ஒரு பெண்ணுக்கும் அந்த நபர் திருமணம் செய்து வைத்திருந்தார். இந்த திருமணத்தில், அருண்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில், திருமணம் நடந்த ஒரு வாரத்தில், அதாவது கடந்த 4ம் தேதி புதுமாப்பிள்ளையின் தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த நபர் கடந்த 6-ந் தேதி பரிதாபமாக உயிர் இழந்தார். இதன் காரணமாக, குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கணவர் கொரோனாவுக்கு பலியானதால், அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் கடந்த 9ம் தேதி இரவு கொரோனாவுக்கு உயிரிழந்தார். புதிதாக திருமணம் செய்த வாலிபர் சில நாட்களிலேயே தந்தை, தாயை பறி கொடுத்ததால் மிகுந்த சோகத்தில் உறைந்தார். அதன்பிறகு, சுதாரித்து கொண்ட அதிகாரிகள், அந்த வாலிபருக்கு நடந்த திருமணத்தில் பலியான தம்பதி முன் நின்று நடத்தி இருந்ததால், புதுமண தம்பதியான வாலிபர், அவரது மனைவி உள்பட ஒரே குடும்பத்தில் 37 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்தினார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு 37 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்கள் 37 பேரில், 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது. இதையடுத்து, புதுமண தம்பதி உள்பட 32 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பீதிக்கு மத்தியில் நடந்த திருமணத்தின் போது 55 வயது நபர் மூலமாக அவரது மனைவி உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் திருமணத்தில் கலந்துகொண்ட அருண்குமார் எம்.எல்.ஏ. உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்