'ம.பி.'-யில் 20 விக்கெட் 'அவுட்'... 'ஒரே பந்தில்'... 'சிந்தியாவின்' சூறாவளிச் சுழலில் சிக்கிய 'இந்திய' அரசியல்... 'அடுத்தடுத்த' அதிர்ச்சியால் ஆடிப்போயுள்ள 'காங்கிரஸ்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச அரசியலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸில் இருந்து விலகி, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

ராகுலுக்கு வலது கரமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா திடீரென கட்சியில் இருந்து வெளியேறியது, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. காங்கிரசில் பொதுச்செயலாளர் பதவி உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

49 வயதே ஆகும் இவர், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார். ராகுல் காந்தியின் நட்பு வட்டாரத்தில் சிந்தியாவுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ராகுல் காந்தியின் வலது கரமாகவே சிந்தியா கருதப்பட்டார். மத்திய பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க அரசு குடும்பத்தில் பிறந்த இவர் 2002-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 4 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கடுமையான உழைப்பு காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு அபரிமிதமான வெற்றி கிடைத்தது.

எனவே முதலமைச்சர் பதவியை அவர் எதிர்பார்த்தார். ஆனால் சோனியா உள்பட மூத்த தலைவர்கள் உதவியுடன் கமல்நாத் திடீரென வந்து முதலமைச்சர் ஆகிவிட்டார்.

அன்று முதல் சிந்தியா கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில்,  மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கியதால் அரசியல் குழப்பம் நிலவி வந்தது.

இதையடுத்து, கமல்நாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்களை நேற்று மாலை முதல் தொடர்பு கொள்ள முடியாததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்து பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார்.

இதையடுத்து, இன்று கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். அவரது ஆதரவாளர்களான 20 எம்எல்ஏக்களும்  ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த இந்த நிகழ்வுகளால் காங்கிரசார் அதிர்ச்சியில் உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் வருகிற 26-ந் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சிந்தியாவை பாரதிய ஜனதா சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்குவது தொடர்பாக பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

MADHYAPRADESH, JYOTIRADITYA SCINDIA, KAMALNATH, RAHULGANDHI, SONIAGANDHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்