‘ஒரு டோஸ் போட்டா போதும்’.. அவசரகால பயன்பாட்டுக்கு வரும் ‘புதிய’ தடுப்பூசி.. மத்திய அரசு அனுமதி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து புதிதாக ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கியுள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி தயாரிப்பதை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை, ஐந்து தடுப்பூசிகள் ஒப்புதல் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் இது நாட்டை மேலும் வலுப்படுத்தும்’ என பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு டோஸ் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடட் இந்திய அரசிடம் ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணப்பித்தது. இந்திய மக்களுக்கும் உலகத்திற்கும் ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்குவதில் முக்கிய மைல்கல்லாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.

பயோலாஜிக்கல் இ லிமிடட் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை உலகம் முழுவதும் விற்பனை செய்ய எங்களின் விநியோக சங்கலியில் பயோலாஜிக்கல் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. பல அரசுகள், சுகாதார நிறுவனங்கள், கோவேக்ஸ் போன்ற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பயோலாஜிக்கல் நிறுவனம் உதவி வருகிறது’ எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்