'மனைவியோட வாழ்க்கை லட்சியம் 'அது'!.. என்ன தடை வந்தாலும் கூடவே இருப்பேன்'!.. கர்ப்பிணி மனைவியின் 'லட்சியத்தை' நிறைவேற்ற.. கணவர் எடுத்த 'அதிரடி' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்ப்பிணி மனைவியின் லட்சியப் பணியான ஆசிரியர் பணியை அடைய, அவரது கணவர், 1,200 கி.மீ. தூரம் மொபட்டில் அழைத்துச்சென்று தேர்வு எழுத வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார் (வயது 27). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது மனைவி ஹெம்ப்ராம் (22). இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களது சொந்த ஊரான கன்டா டோலா கிராமத்தில் இருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாகும்.

ஹெம்ப்ராமுக்கு பள்ளி ஆசிரியையாவது லட்சியம் என்பதால், மனைவியை எப்படியாவது தேர்வு எழுதவைத்து ஆசிரியையாக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் 8-ம் வகுப்பு வரை படித்துள்ள தனஞ்ஜெய்.

கொரோனா பொது முடக்கத்தால் போக்குவரத்து தடைபட்டிருப்பது தேர்வுக்குச் சென்று திரும்புவதை சிரமத்திற்குரிய ஒன்றாக மாற்றியிருந்தது. தேர்வு மையத்திற்கு செல்லும் வழியில் 4 மாநில எல்லைப் பகுதிகளை கடக்க வேண்டும். அத்துடன் மோசமானதாக இருக்கும் பல சாலைகளையும் கடந்து கர்ப்பிணியை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

ரெயில், பஸ்கள் இயக்கப்படாததால் வாடகை காரில் செல்ல முயற்சி செய்தபோது, அதற்கு 30 ஆயிரம் வரை செலவாகும் என்று அறிந்து கலக்கமடைந்தார். பின்னர் தன் மனைவியின் லட்சியத்தை நிறைவேற்ற தேர்வு மையத்திற்கு சிரமத்தை பார்க்காமல் தன் மொபட்டில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார் தனஞ்ஜெய்.

அதன்படி மழை, மோசமான சாலையைப் பொருட்படுத்தாமல் தனது கர்ப்பிணி மனைவியை 1,200 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார்.

"தங்களிடம் இருந்த சிறிய நகையை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் திரட்டிக் கொண்டு, தேர்வுக்கு புறப்பட்டோம். ரூ.5 ஆயிரத்திற்குள் அறை வாடகை, உள்ளிட்ட ஒரு வழி பயண செலவை முடித்துக்கொண்டோம். வரும் 11-ந்தேதி வரை தேர்வு எழுத வேண்டி உள்ளது" என்கிறார் தனஞ்ஜெய்.

"சவாலான இந்த பயணத்திற்கு முதலில் மனைவி தயக்கம் தெரிவித்ததாகவும், வழியில் தாங்கள் மழையை எதிர்கொண்டதாகவும், தனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும்" அவர் கூறினார்.

"தற்போது தனது மனைவி தேர்வை எதிர்கொண்டிருப்பதால் எனது பிரச்சனைகள் தீர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் அவர் ஆசிரியையாக தேர்ச்சி பெறுவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார் தனஞ்ஜெய்.

அவர் கர்ப்பிணி மனைவியுடன் மொபட்டில் பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுத்தது. உடனடியாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்