“லட்சக் கணக்கில் சம்பளம்!”.. உதறிவிட்டு இயற்கை விவசாயம்!.. இப்போ “ஊராட்சி மன்றத் தலைவர்!”.. ஐ.டி “சிங்கப்பெண்”!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா ராமு(37).

காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ரேகா ராமு சென்னையில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர், அதே துறையில் பணிபுரிந்த பாண்டேஸ்வரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் ரசாயன உரத்தினால் விளையும் உணவுப்பொருட்களின் தீமையை உணர்ந்தும், இயற்கை விவசாயத்தின் தேவையை உணர்ந்தும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த ஐ.டி துறையை உதறித்தள்ளினர்.

சுயமாக பாண்டேஸ்வரத்தில் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு, விவசாயத் தொழில்முனைவோர்களாகினர். உரம் போடாத விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உப பொருட்களை சந்தைப்படுத்துவதையும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை வெகுமக்களுக்கு ஊட்டுவதையுமே கடமையாக்கிக் கொண்டனர் இந்த லட்சியத் தம்பதியினர். ஃபார்மர் அண்டு கோ என்கிற நிறுவனத்தையும் இதற்கென தொடங்கினர். நெல் சாகுபடிகளை மட்டுமே செய்துகொண்டு வந்த மக்களுக்கு பிற பயிர்களையும் பருவத்துக்கேற்ற வகையில், இயற்கை முறையில் விளைவிக்க ஆலோசனை வழங்கினர். 

ஆனால், அந்த ஊரில் ஆற்று மணல் கொள்ளையில் தொடங்கி பல்வேறு வகையிலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு மக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்டதும், இதை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்குமான படிநிலைகளை யோசித்தனர். மக்களுக்கான சுய வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்தினர். விவசாயத்துக்கான நீர்ப்பாசனம் உள்ளிட்ட இயற்கை வாழ்வுக்கான சின்னச் சின்னத் தேவைகளை நிறைவேற்றவும் அதிகாரம் தேவைப்பட்டதை இறுதியாக உணர்ந்தனர்.

இதனையடுத்து ரேகா பார்த்தசாரதி பாண்டேஸ்வரம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, 881 வாக்குகள் பெற்று (260 வாக்குகள் வித்தியாசத்தில்) வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவரான ஐ.டி பெண் என்கிற பேறினை அடைந்தார். தற்போது அரசின் நிதியைப் பெற்று, தலையிடல் இன்றி மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டிய பணிகளில் ஈடுபட நினைக்கும் ரேகா, தம் வாழ்வில் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளவே நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

IT, REKHARAMU, REKHAPARTHASARATHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்