‘என்ன மனுஷன்யா..!’ வெற்றி பெற்றபின் ‘வில்லியம்சன்’ சொன்ன பதில்.. உருகும் இந்திய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியபின் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறிய பதில் இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. இதில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ‘இது ஒரு வித்தியாசமான உணர்வாக உள்ளது. எனது கேப்டன்சியில் ஒரு கோப்பையை வென்றது மகிழ்ச்சியாக இருகிறது. இதற்காக விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்முறையாக ஐசிசி கோப்பையை நாங்கள் வென்றுள்ளோம். இப்போட்டியில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே விளையாடிய அனைத்து வீரர்களுமே வெற்றியாளர்கள்தான்.

இந்த வெற்றி எங்களுக்கு நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இந்தியா அனைத்து வகையிலும் எவ்வளவு சிறப்பான அணி என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் அணியில் அனைவரின் உழைப்பையும், ஈடுபாட்டையும் இப்போட்டியில் மூலம் பார்த்தோம். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த 6 நாட்களில் எந்த அணியும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இரு அணிகளும் சமமான பலத்துடன் விளையாடியது. இதில் நாங்கள் சற்று சரியான திசையில் சென்றோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் இன்னிங்ஸில் சற்று சிரமப்பட்டோம். ஆனால் அணியின் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாக விளையாடி வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.

இந்தியாவின் இரண்டாவது பிடித்த அணி நாங்கள் என கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இது இப்பவும் அப்படியே இருக்கும் என நான் நம்புகிறேன். இதுவொரு அற்புதமாக போட்டி. வெற்றி, தோல்வி, டிரா என்பதை கடந்து இரு அணி வீரர்களும் சிறப்பாகவே விளையாடினர்’ என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். கோப்பையை வென்றபின் இதுபோல் கேன் வில்லியம்சன் பக்குவமாக பேசியது இந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்