‘7 வருசம் இஸ்ரேலில் வேலை’!.. ‘இறக்கும் முன் கணவருடன் வீடியோ கால்’.. இஸ்ரேலில் உயிரிழந்த கேரள ‘நர்ஸ்’-ன் உருக்கமான பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த சில தினங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் 13 மாடி அரசியல் தலைமை அலுவலகத்தை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகணை வீசியது. சுமார் 200 ராக்கெட் ஏவுகணைகள் வீசப்பட்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 65-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சௌமியா என்ற செவிலியர் உயிரிழந்துள்ளார். இவர் இஸ்ரேலின் அஷ்கிலான் என்ற நகரில் வசித்து வந்துள்ளார். அங்கு கடந்த 7 ஆண்டுகளாக மூதாட்டி ஒருவருக்கு பராமரிப்பு பணிகளை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, சௌமியா தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது பயங்கர சத்தம் கேட்டுள்ளது. உடனே செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சௌமியாவின் கணவர், இஸ்ரேலில் உள்ள கேரள அமைப்புகளை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வீசிய ராக்கெட் ஒன்று, சௌமியா இருந்த வீட்டை தாக்கியுள்ளது. இதனால் வீடு இடிந்து விழுந்ததில் சௌமியா பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் செவிலியர் சௌமியாவின் இறப்பிற்கு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் பலியான சௌமியா சந்தோஷின் குடும்பத்தினருடன் நான் பேசினேன். சௌமியாவின் 9 வயது மகன் அடோனி இவ்வளவு இளம் வயதில் தன் தாயை இழந்துவிட்டார்.

இந்த தாக்குதல் 2008 மும்பை தாக்குதலில் பெற்றோரை இழந்த இரண்டரை வயது சிறுவன் மோசேயை நினைவுப்படுத்துகிறது. கடவுள் அவர்களுக்கு பலத்தையும் தைரியத்தையும் தருவார். சௌமியாவின் இழப்புக்கு இஸ்ரேல் நாடு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது’ என ரான் மல்கா பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சௌமியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்