‘4 கட்டங்களை கொண்ட கொரோனா பரவல்’... ‘நாம் எந்த கட்டத்தில் உள்ளோம்’... 'வெளியான புதிய தகவல்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரவும் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், வகைப்படுத்தி, அதில் இந்தியா ஆபத்தான கட்டத்தில் உள்ளதா இல்லையா என்பது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடுகிறது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதுடன் தமிழகத்தில் 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

முதல் கட்டம் (Imported Cases) : கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது.

2-வது கட்டம் (Local Transmission) : பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்படுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவர். யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இதனால் வைரஸ் சங்கிலியை அறுத்தெறிய முடியும்.

3-வது கட்டம் (Community Transmission): இது சமூகத் தொற்று ஏற்படும் கட்டம். யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்றே தெரியாமல் சமூகத்தில் பரவலான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது. ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பே இல்லாத ஒருவருக்கு பரவுவதும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டிற்கும் செல்லாத நிலையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுவதும் அடங்கும். இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3-ம் கட்டத்தில் உள்ளன.

4-வது கட்டம் (Epidemic) : இதுதான் மிகவும் மோசமான நிலை. எப்போது தொற்று குணமாகும், முடியும் என்றே தெரியாமல் ஏற்படும் பேரிடர். சீனாவில் இதுதான் நடந்தது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா கூறும்போது,  ''நாம் எல்லோரும் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம் என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய சூழலில் மூன்றாம் கட்டத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது கட்டம் என்பது சமூகத்துக்குப் பரவுவதாகும். அதை நாம் எட்டிவிடமாட்டோம்  என்று நம்புகிறேன்.

சர்வதேச எல்லைகளை மூடுவது, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து சமூகப் பரவலைத் தடுக்கலாம்' என்று தெரிவித்துள்ளார். அதேபோல அவசியமற்ற பயணங்களை தவிர்த்தல், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை  மேற்கொள்ளுதல் , கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்துச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா அடுத்த கட்டத்திற்கு முன்னேறாமல் தவிர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

ICMR, SECOND, STAGE

மற்ற செய்திகள்