'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீனாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை, இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக லக்சம்பர்க் நாட்டைவிட இருமடங்கு நிலத்தை வழங்க இந்தியா திட்டம் தீட்டி வருகிறது.

உலக வர்த்தகம் மற்றும் வியாபாரங்களை கொரோனா வைரஸ் மாற்றிக் கொண்டு வருகிறது. அதிலும் உலகத்தின் மிகுந்த மனித சக்தி மற்றும் உற்பத்தி வசதிகள் கொண்ட சீனாவில், பல்வேறு நாடுகளும் தங்களது நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால், உற்பத்தி தேக்கம் அடைந்து பல நிறுவனங்களுக்கு வரவேண்டிய சரக்குகள் வராமல் தேக்கமடைந்தன. இதனால் சீனாவை மட்டும் அதிகம் சார்ந்து இருப்பதை, பல்வேறு நிறுவனங்களும் குறைத்து அங்கிருந்து வெளியேற விரும்புவதாக, எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சீனாவில் இருந்து, குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம் தீட்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் 4 லட்சத்து 61 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, ஏற்கனவே தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரம் நிலங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்க இந்தியா ஒதுக்கியுள்ள நிலங்கள், உலக வங்கியின் கணக்குப்படி லக்சம்பர்க் நாட்டைவிட இரு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. நிலம், மின் ஆற்றல், தண்ணீர், சாலை வசதி  உள்பட உள்கட்டமைப்பு வசதி மற்றும அதிக மனித சக்திகளை வழங்குவது அந்த நிறுவனங்களை ஈர்க்க இந்தியாவிற்கு வர வைக்க உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

மின்சாரம், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மின்னணுவியல், கனரக பொறியியல், சூரிய உபகரணங்கள், உணவுப் பதப்படுத்துதல், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சீர்செய்து, அதிகளவில் வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சீனாவில் இருக்கும் பேஸ்ஃபுக், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா பக்கம் தங்கள் கவனத்தை திருப்ப முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், லாக் ஹீடு மார்டின், அடோப், ஹனிவெல், பாஸ்டன் சயின்டிபிக் மற்றும் சிஸ்கோ சிஸ்டம் உள்பட ஏறத்தாழ 100 சிறு மற்றும் பெரிய அமெரிக்க நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதேபோல், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களும் இதற்கான வேலைகளை தொடங்கியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்