ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. கடைசில இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து இருக்கிறார். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி. மும்பையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள். என்றேனும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரிய நேரிடும் என கருதிய இவர்கள் ஒரே நபரை திருமணம் செய்து கொண்டு பிரியாமல் வாழ்வது என முடிவு எடுத்திருக்கின்றனர்.

அதன்படி இவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான அதுல் அவ்தாதே என்பவரை திருமணம் செய்ய இருவரும் முடிவு எடுத்து இருக்கின்றனர். இதற்கு அதுல் மற்றும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடந்திருக்கிறது. சோலாப்பூரில் ஒரே மேடையில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இருவரையும் கரம் பிடித்தார் மாப்பிள்ளை அதுல். இந்த வீடியோ இணைய தளங்களில் படுவைரலாக பரவியது.

சட்டத்தின் அடிப்படையில் மனைவி இருக்கும் போது இன்னொரு திருமணம் செய்து கொள்வது தவறு என்று சொல்லப்படுவதால் இந்த திருமணம் சட்டத்திற்கு புறம்பானதா? என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பாக இணைய தளங்களில் அனல் பறக்கும் விவாதங்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் வழக்கு பதிவு வரை சென்று இருக்கிறது.

இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்த புது மாப்பிள்ளை அதுல் மீது சோலாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர். இது குறித்து பேசிய சோலாப்பூர் எஸ்பி ஷிரிஷ் சர்தேஷ் பாண்டே," ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட அதுல் அவ்தாதே என்பவர் மீது ஐ பி சி பிரிவு 494 -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இளைஞர் ஒருவர் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் கரம் பிடித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

TWIN SISTERS, WEDDING, MAHARASHTRA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்