‘செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்’!.. எதிர்க்கட்சி தலைவர்கள் கிட்ட கூட பேச முடியல.. வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசை மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் (NSO Group) பெகாசஸ் உளவு மென்பொருள் (Pegasus spyware) மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் (Mamata Banerjee) பெகாசஸ் விவகாரம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தியாகிகள் தினத்தையொட்டி நேற்று ஆன்லைன் வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘ஜனநாயகத்தை உருவாக்கும் ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றிலும் பெகாசஸ் ஊடுருவி உள்ளது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது. எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன்.

தற்போது முன்னெச்சரிக்கையாக எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன். மத்திய அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்துவிடும். நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்’ என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்