‘என்கவுன்டர்’ நடந்தது ‘எதனால், எப்படி?’.. ‘உண்மையை’ உடைத்த காவல் ஆணையர் ‘சஜ்ஜனார்!’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா பெண் மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டது எதனால், எப்படி என காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 24ஆம் தேதி இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்தும் முழக்கம் எழுந்தது. இந்நிலையில் இன்று காலை கைதான 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுன்ட்டரை பொதுமக்கள் பெரும்பாலானோர் வரவேற்றாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் என்கவுன்டரின்போது என்ன நடந்தது என்பது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல் ஆணையர் சஜ்ஜனார், “தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், சம்பவ இடத்திலிருந்து திரட்டப்பட்ட தடயங்களின் அடிப்படையிலேயே முகமது ஆரிஃப் (26), சிவா  (20), நவீன் (20), சென்னகேசவலு (20) ஆகிய 4 பேரை நாங்கள் கைது செய்தோம். அவர்கள் 4 பேரையும் நவம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தோம்.

இதையடுத்து 4வது நாளான இன்று விசாரணைக்காக அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றோம். காலை 5.45 மணிக்கு அங்கு சென்ற நாங்கள் சம்பவத்தன்று நடந்ததை அவர்களை செய்துகாட்டச் சொன்னோம். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அவர்களில் ஒருவர் காவலர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து எங்களை நோக்கி சுட்டார். பின்னர் அவருடன் மற்றவர்களும் இணைந்துகொண்டார்கள்.

இதைத்தொடர்ந்து நாங்கள் தற்காப்புக்காக அவர்களை நோக்கி சுட்டதில் அந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அந்த 4 பேருக்கும் தெலுங்கானாவில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரத்தை கருத்தில்கொண்டு ஊடகங்களும், மக்களும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

TELANGANA, CRIME, MURDER, POLICE, ENCOUNTER, HYDERABAD, VET, DOCTOR, SAJJANAR, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்