VIDEO: கண் இமைக்கும் நேரத்துல ‘முழு வீடும்’ மூழ்கியிருச்சு.. நெஞ்சை பதறவைத்த வீடியோ.. கேரளாவை புரட்டிப்போட்ட வெள்ளம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கில் வீடு ஒன்று மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், கேரளாவில் (Kerala) கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இதில் இடுக்கி மாவட்டம் கொக்கையாறு அடுத்த பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் வசித்த 23 பேரில் 17 பேர் மீட்கப்பட்ட நிலையில், மண்ணுக்குள் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் காஞ்சிராபள்ளி தாலுகாவில் உள்ள முண்டகாயம் நகரில் உள்ள ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் கால்லேபள்ளம் பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த வீடு ஒன்று, வெள்ளத்தால் அடியோடு அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவேளையாக அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்னதாகவே மீட்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால், இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஆற்றங்கரையோர மக்கள் சீக்கிரம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்