'அம்மா, பெத்த பொண்ணுன்னும், அக்கா, கூட பொறந்த பொறப்புன்னும் பாக்கல'... 'மீண்டும் அரங்கேறிய ஒரு கொடூரம்'... நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆணவக்கொலைக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,  தற்போது மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா புலிகுண்டே கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரியில் கடந்த 3-ந் தேதி இளம் பெண் ஒருவரது பிணம் மிதந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலில் பெரிய கல் கட்டப்பட்டுக் கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடலில் கல்லைக் கட்டி ஏரியில் வீசி சென்றது தெரிந்தது. இதனிடையே கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இருப்பினும் அந்த இளம்பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கொலையான இளம்பெண் கவுரிபித்தனூர் தாலுகா துமகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற 18 வயது இளம் பெண் என தெரியவந்தது. இதையடுத்து சந்தியாவின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரது தாயிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சந்தியாவின் தாய் ராமாஞ்ஜுனம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்தது. பெற்ற மகளைத் தனது இன்னொரு மகள் நேத்ராவதி, அவரது கணவர் பாலகிருஷ்ணா, தனது மகன் அசோக் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து உடலை ஏரியில் வீசியதை ராமாஞ்ஜுனம்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமாஞ்ஜுனம்மாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது பல அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்தது.

''கொலையான சந்தியாவுக்கு 15 வயது இருக்கும் போது, ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வயதில் காதல் எல்லாம் வேண்டாம் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அதைக் கேட்காத சந்தியா, வீட்டைவிட்டு வெளியேறி இந்துப்பூருக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து தனது மைனர் பெண்ணை கடத்தி சென்று விட்டதாக அந்த வாலிபர் மீது சந்தியாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தார்கள். அதன் பேரில் அந்த வாலிபரைக் கைது செய்த போலீசார், சந்தியாவை மீட்டுப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். நாட்கள் உருண்டோடிய நிலையில், சந்தியா அந்த வாலிபரை இன்னும் மறக்காமலிருந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து உள்ளனர்.

ஆனால் சந்தியா, தனது காதலனைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறி அடம்பிடித்து உள்ளார். ஆனால் வேறு சாதி பையனைத் திருமணம் செய்து வைக்கமாட்டோம் என அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள். ஆனாலும் சந்தியா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மகளிடம் எப்படிப் பேசி பார்த்தும் ஒன்றும் நடக்காத நிலையில், கடும் ஆத்திரத்திலிருந்த அவர், பெற்ற மகள் என்றும் கூட பாராமல் சந்தியாவை ஆணவக்கொலை செய்ய முடிவு செய்தார்.

தனது முடிவு குறித்து தனது மகள், அவரது கணவர், மகனிடம் கூறியுள்ளார். அவர்களுக்கும் அதற்குச் சம்மதம் தெரிவிக்க, சந்தியாவை புலிகுண்டே கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரது கழுத்தை 4 பேரும் சேர்ந்து நெரித்து கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலில் பெரிய கல்லை கட்டி ஏரியில் வீசி சென்றதாக'' விசாரணையில் கூறியுள்ளார்கள்.

இதற்கிடையே இந்த கொலையில் சந்தியாவின் தந்தைக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேறு சாதி பையனைக் காதலித்தார் என்ற ஒரே காரணத்திற்காக, பெற்ற மகள் என்று கூட பாராமல், மகள், மகன் உதவியுடன் தாயே கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதியின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கோழைத்தனமான மற்றும் கொடூர குற்றங்கள் என்று நிற்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்