மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்த ‘பிரபல’ தொழிலதிபர்.. தரையிறங்கும் நேரத்தில் ‘திடீரென’ ஏற்பட்ட கோளாறு.. கேரளாவில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி, கடந்த 1973-ம் ஆண்டு தனது மாமா ஒவரின் தொழிலை கவனிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றவர். தற்போது LuLu group என்ற மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவுயுள்ளார். ஃபோர்ப் இதழில் வெளியான தகவலின்படி இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர். அதவாது இந்திய மதிப்பில் சுமார் 35,000 கோடி ரூபாய். LuLu நிறுவனத்துக்கு அரபு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஹைப்பர் மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் உள்ளன.

கொரோனா தொற்று சமயத்தில் கேரளாவுக்கு பல உதவிகளை யூசுப் அலி செய்துள்ளார். அதில், கேரளாவில் கொரோனா நோயாளிக்களுக்காக 1400 படுக்கை வசதியுடைய மருத்துவ மையம் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் சுமார் 6.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு கொரோனா நடவடிக்கைகளுக்காக நிதி உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக யூசுப் அலி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று கேரளாவுக்கு ஹெலிகாப்டரில் வந்துள்ளார். கொச்சி பனங்காடு பகுதியில் உள்ள கேரள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஹெலிபேடில் அவர்கள் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்துள்ளது. ஆனால் அப்போது லேசான மழை பெய்துகொண்டிருந்ததால், ஹெலிகாப்டரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனே சுதாரித்த விமானி, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், குடியிருப்புக்கு அருகே உள்ள புதரில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் யூசுப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக வெளியேறினர்.

இந்த விபத்து குறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘அருகில் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. மேலும் மின்சார கம்பிகளும் அதிகமாக உள்ளது. விமானியின் சாதூர்யத்தால் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர். பிரபல தொழிலதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென குடியிருப்பு பகுதியில் தரையிறக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்