'செத்தாலும் சேர்ந்தே சாவோம்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு'... 'தம்பதியின் உருக்கமான சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், 3 நாட்கள் கூரையின் மீது அமர்ந்து பரிதவித்த தம்பதி, மரண போராட்டம் நடத்தி உள்ள உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெலகாவியில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெலகாவி தாலுகா கங்காபுரா என்ற கிராமத்தை சேர்ந்த காலேஷ்-ரத்னம்மா என்ற தம்பதி, கடந்த 5-ந் தேதி சிறிது தொலைவில் உள்ள தங்களின் விவசாய தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு கனமழை பெய்ததால், அவர்களின் சிறிய மண் கூரை வீட்டை ஒட்டியுள்ள கால்வாயில், மழைநீர் சற்று அதிகமாக சென்றது.

மறுநாள் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று கருதி அன்று இரவு அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கினர். ஆனால் கனமழை இடைவிடாமல் பெய்ததால், அந்த கால்வாயில் தண்ணீர் அதிகளவில் கரைபுரண்டு ஓடியது. கால்வாய் நீர், அவர்களின் வீட்டை தொட்டபடி பாய்ந்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு உயிர் மீது பயம் வந்துவிட்டது. நாம் இங்கிருந்து தப்பி செல்ல முடியுமா என்று அவர்களுக்குள் கேள்வி எழுந்தது. காலேசுக்கு நீச்சல் தெரியும், என்பதால் அவரால் நீந்தி கரைசேர முடியும் என்று கருதினார்.

ஆனால் மனைவியை விட்டு, திரும்ப அவருக்கு மனமில்லை. நாளுக்குள் நாள் மழை கோரதாண்டவம் ஆடியது. இதனால் அந்த கால்வாயில் மழைநீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதை பார்த்த அவர்கள், நாம் இங்கிருந்து தப்பி செல்ல முடியாது, அதனால் முடிந்தவரை இந்த கூரை மீது அமர்ந்திருப்போம், யாராவது நம்மை மீட்க வருவார்கள் என்று அவர்கள் கருதினர். செத்தால் இருவரும் சேர்ந்து சாவோம், பிழைத்தாலும் சேர்ந்தே பிழைப்போம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு நிமிடத்தை கடப்பது என்பது அவர்களுக்கு ஒரு நாள் போன்று இருந்தது. குடிநீர், உணவு என எதுவும் இருக்கவில்லை. தங்களின் உடல் மீது போர்வையை போர்த்தியபடி கூரையில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் கூரை மீது 2 பேர் உயிருக்கு போராடி வருவது பற்றி தகவல் முதல்வர் எடியூரப்பாவின் கவனத்திற்கு வந்தது. ஹெலிகாப்டர் கிடைக்காததால், மோட்டார் படகு மூலம் படகில் வந்த மீட்புக் குழுவினர், அந்த தம்பதியை கீழே இறக்கி படகில் ஏற்றினர். 3 நாட்கள் குடிநீர், உணவு இல்லாததால் அவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். படகில் இருந்து அந்த தம்பதியை கீழே இறக்கியதும், தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்பினர். ‘இறைவன் அருளால் நாங்கள் உயிர் பிழைத்துள்ளோம்’ என்று அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

KARANATAKA, HEAVYRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்