மெக்ஸிகோ பெண்ணை கரம் பிடிக்க... இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்!.. இளம் ஜோடியின் அசரவைக்கும் 'லவ்' டூயட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மெக்ஸிகோ பெண்ணின் திருமணத்திற்காக இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டிருந்த சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.

ஹரியாணா மாநிலம் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் காஷ்யப். மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் டானா ஜோஹரி ஓலிவெராஸ் என்ற பெண்ணுடன் மொழி கற்கும் செல்போன் செயலி மூலம் நிரஞ்சனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி இருவரும் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக பிப்ரவரி 11-ம் தேதி மெக்ஸிகோவிலிருந்து டானா வந்தார்.

மார்ச் 18-ம் தேதி அவருக்குத் திருமணம் நடைபெறவிருந்தது. கொரோனா வைரஸ் பிரச்சினையால் திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நிரஞ்சன், டானா ஆகியோர் சந்தித்து மனு அளித்து திருமணம் செய்ய அனுமதியைப் பெற்றனர்.

இதுகுறித்து நிரஞ்சன் கூறும்போது, "எனது தோழி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சிறப்பு திருமணச் சட்டம் மூலம் மட்டுமே நான் அவரை திருமணம் செய்ய முடியும் என்பதை அறிந்தேன். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்றோம். பின்னர் ரோடக் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமணத்தை நடத்த அனுமதி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி இரவு 8 மணிக்கு ரோடக் நீதிமன்றம் திறக்கப்பட்டு எங்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்