பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த கிச்சடி மணம்.. கதவை திறந்தப்போ நடு வீட்டில் கண்ட காட்சி.. கிச்சடி நல்லது தான்.. ஆனா இப்போ இல்ல..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கவுகாத்தி: வீட்டில் திருட போன இடத்தில் கிச்சடிக்கு ஆசைப்பட்டு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அசாமில் நடந்தேறியுள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக வீடுகளில் திருட செல்லும் கொள்ளையர்களில் சிலர் மிகவும் காமெடியான செயல்கள் மூலம் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது வாடிக்கை.

அசாம் காவல்துறையினர் தங்கள் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்வு:

ஒரு சில நேரத்தில் திருடிய களைப்பில் ஏ.சி. காற்றில் திருடன் உறங்கியதும், இருட்டில் கண் தெரியவில்லை என லைட் போட்டு திருடிய சம்பவமும், ஷாக் அடித்து திருடன் மாட்டிய சம்பவம் என பல நிகழ்வுகள் நடந்துள்ளது. தற்போது அசாமில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்த நிலையில் அசாம் காவல்துறையினர் தங்கள் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இதுக்குறித்து பதிவிட்டுள்ளனர்.

பசிக்க ஆரம்பித்தது:

அசாம் மாநிலம், கவுகாத்தியில்  இருக்கும் ஹெங்ராபுரி எனும் பகுதியில் இருக்கும் ஆளில்லாத வீட்டிற்கு இரவு நேரத்தில் திருடன் ஒருவர் நுழைந்துள்ளார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் திருடி இருக்கிறார்.

உள்ளே புகுந்த வேகத்தில் கிடைத்த பொருள்களை எல்லாம் அள்ளி போட்டுள்ளார். திருடுவதற்கு முன் சாப்பிடாமல் வந்துள்ளார். இந்த நிலையில், திருடிய களைப்பில் அவருக்கு பசிக்க ஆரம்பித்துள்ளது. உடனடியாக கிச்சனுக்குள் சென்றுள்ளார். வீட்டில் இருந்த சில பொருட்களை வைத்து கிச்சடி சமைத்து ருசியாக சாப்பிட்டுள்ளார்.

பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த சத்தம்:

என்னடா இது பூட்டிய வீட்டில் இருந்து சத்தமும், கிச்சடி வாசனையும் வருகிறதே என எண்ணிய அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடன் நடு வீட்டில் உட்கார்ந்து கிச்சடி சாப்பிட்ட போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அசாம் காவல்துறையின்  தன் டுவிட்டர் பக்கத்தில், 'கிச்சடி உடல்நலத்திற்கு நல்லது தான். ஆனாலும் திருட்டு வேலையில் ஈடுபடும் போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும்' என கிண்டலாக பதிவிடப்பட்டுள்ளது. அதோடு கைதான திருடனுக்கு கவுகாத்தி போலிசார் ஹாட் மீல்ஸ் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

GUWAHATI, THIEF, KICHADI, கிச்சடி, திருடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்