'கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் எங்க ரெகுலர் கஸ்டமர்ஸ்'... 'போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்'... வலையில் மீன் சிக்குவது போல சிக்கிய இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நன்றாகச் சம்பாதிக்கும் மென்பொறியாளர்களை குறி வைத்து போதை வெறியாட்டம் நடத்தி வந்த கும்பல் காவல்துறையின் வலையில் சிக்கியுள்ளது.

புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் பெங்களூருவில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்து அதைப் புத்தாண்டு தினமன்று விற்பனை செய்யப் போதை கும்பல் ஒன்று திட்டம் போட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரைப் பெங்களூரு மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கமலேசன் என்ற ராமமூர்த்தி, சதீஸ்குமார் என்ற சுப்பிரமணி, பெங்களூரு ஆர்.டி.நகரைச் சேர்ந்த அஜாஜ் பாஷா, ஹெப்பால் அருகே கெம்பாபுராவை சேர்ந்த திருபால் ரெட்டி என்று தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் ஆர்.டி.நகரில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றைக் கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அதில், ''கைதான 4 பேரும் போதைப்பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தொழிலாக வைத்திருந்தனர். இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் கணினி பொறியாளர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள்.

இவர்களிடம் பணம் எப்போதும் இருக்கும் என்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்து வந்துள்ளார்கள். இவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருட்கள் பயன்படுத்துவார்கள் என்பதால் போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களது வீட்டில் சோதனை நடத்திய போது, 5 கிலோ 600 கிராம் ஆசிஷ் ஆயில், 3 கிலோ 300 கிராம் கஞ்சா, ஒரு விலை உயர்ந்த கார், மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி 15 லட்சம் ஆகும்.''

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், பெங்களூரு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை காவல்துறை ஆணையர் கமல்பந்த், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் ஆணையர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டார்கள். பின்னர் காவல்துறை ஆணையர் கமல்பந்த் கூறுகையில், ''பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைப் போன்று புத்தாண்டுக்குப் போதைப்பொருட்கள் விற்பனை செய்யத் திட்டமிடுபவர்களையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவர்களும் விரைவில் சிக்குவார்கள்'' என கமல்பந்த் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்