'ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட'.. கஃபே காபி டே நிறுவனரின் 'பிரேதம்'.. நாட்டையே உலுக்கியுள்ள 'சோக' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காபி டே உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான 58 வயதான வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெரும் காபி தோட்டத்திற்கு சொந்தமான வி.ஜி.சித்தார்த்தா, கடந்த திங்கள் மாலை முதல் காணாமல் போனதோடு தன் குடும்பத்தாருக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதிவைத்துச் சென்றார். அதில், கடின உழைப்பைக் கொடுத்தபோதிலும், வணிக ரீதியான லாபகரமான உத்தியைக் கண்டடையத் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

1992-ல், `அமல்கமடேட் பீன் கம்பெனி டிரேடிங்’ என்கிற பெயரில் காபி கொட்டைகளைக் கொள்முதல் செய்வது, பதப்படுத்துவது மற்றும் வறுத்தெடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்கான ஒருங்கிணைந்த கம்பெனியைத் தொடங்கிய சித்தார்த்தா, 1996ல்  பெங்களூருவின் பிரிகேட் ரோட்டில் தனது கஃபே காபி டே-வின் முதல் கிளையை நிறுவினார்.அதன் பின்னர் உலகம் முழுவதும், பங்கு வைக்கத் தொடங்கினார். இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிட்டார். 2015-ம் ஆண்டு Forbes இதழில், இந்தியாவின் 75-வது பணக்காரராக சித்தார்த்தா குறிப்பிடப்பட்டார். மார்ச் 2019-ன் நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,752 கஃபே கிளைகளுடன் இந்நிறுவனம் இருந்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறை வருமான வரித்துறை சிக்கலை சந்தித்தார் சித்தார்த்தா. மேலும் அவருக்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், தனது டிரைவருடன் நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள ஜெப்பினா மொகாரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது காரை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் எடுக்காத நிலையில், டிரைவர் அவரது குடும்பத்தாரிடம் தகவல் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, தீவிர தேடுதலுக்கு பின், அவரது உடல்  நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இணை கமிஷனர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தாவின் இறுதி அஞ்சலியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தார். மேலும் கஃபே காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக கர்நாடகாவின் முன்னாள் தலைமை செயலர், எஸ்.வி.ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

VGSIDDHARTHA, CAFECOFFEEDAY

மற்ற செய்திகள்