'2 ஆயிரம் கோடி டிமிக்கி கொடுத்து இருக்காங்க'... 'இனிமேல் இவங்களையும் உள்ள கொண்டு வரப்போறோம்'... ஹோட்டல் உணவு விலை உயருமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியாகத்தான் இந்த பணிகளைச் செய்கின்றன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. அதில் இது சம்பந்தமாக முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையைச் சரக்கு, சேவை வரிநடைமுறையின் கீழ் கொண்டுவரவாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளது. அதேபோன்று ஓட்டல் உணவுகளை வீடுகளுக்குச் சென்று சப்ளை செய்யும் சப்ளை நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

ஏற்கெனவே ஓட்டல்களில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அதனை விநியோகம் என்ற சேவையை வழங்கும் நிறுவனங்கள் என்பதால் அதற்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் அந்த நிறுவனங்கள் சேவை என்ற கணக்கில் வரும் என்பதால் அதற்கு வரி வசூலிக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

பெரும்பாலான நடுத்தர ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாகக் கட்டுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஓட்டல்கள் இந்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே ஓட்டல்களில் முறையாக வரி வசூல் செய்வதற்கு ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாளை நடைபெறும் ஜிஎஸ்ட கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையே உணவு சப்ளை நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க இருப்பதால் உணவுப் பொருட்கள் விலை உயர்வதற்கும் வாய்ப்புள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்