Video: யாருகிட்ட என்ன பேசுற?... வங்கியில் புகுந்து 'பெண்' ஊழியரை சரமாரியாக 'தாக்கிய' கான்ஸ்டபிள்... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வங்கியில் புகுந்து பெண் ஊழியரை கான்ஸ்டபிள் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்றுக்கு நடுவிலும் பொதுமக்கள் நலன் கருதி வங்கிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கான்ஸ்டபிள் ஒருவரின் செயலால் வங்கி கூட்டமைப்புகள் தற்போது கொதித்து எழுந்துள்ளன. குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கனரா வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு கடந்த 22-ம் தேதி மாலை போலீஸ் கான்ஸ்டபிள் கான்ஸயம்பாய் துலாபாய் என்பவர் வந்துள்ளார்.

4.30 மணியளவில் அவர் அங்கு வந்ததாக தெரிகிறது. வங்கியில் அப்போது துணை மேலாளர், பெண் ஊழியர் ஒருவர், பியூன் என மூவர் மட்டுமே இருந்துள்ளனர். அவர் தன்னுடைய பாஸ் புக்கில் எண்ட்ரி போட்டு தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வங்கி நேரம் முடிந்து விட்டதால் நாளை வரும்படி தெரிவித்து இருக்கின்றனர். உடனே அவர் மோசமான வார்த்தைகளால் அங்கிருந்தோரை திட்ட, இதை அந்த பெண் ஊழியர் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கான்ஸயம்பாய் சட்டென தடுப்பை தாண்டி உள்ளே சென்று அந்த பெண் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ட்விட்டரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக சூரத் போலீஸ் கமிஷனரிடம் தான் பேசியதாகவும் குற்றாவளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய ட்விட்டரில், '' அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். சவாலான இந்த சூழ்நிலையில் வங்கிகள் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றன. அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது,'' என ட்வீட் செய்துள்ளார்.

பெண் ஊழியரை தாக்கிய கான்ஸ்டபிள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக சூரத் போலீஸ் கமிஷனர் ஆர்.பி.பிரம்பாத் தெரிவித்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல வங்கி தொழிற்சங்ககளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்