'என் மகளோட உயிர் போறப்போ நான் அவகூட இல்ல...' 'இறந்து 2-வது நாளில் கொரோனா டூட்டிக்கு திரும்பிய போலீஸ்...' நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உடல்நிலை சரியில்லாத தன் மகள் இறந்த இரண்டாவது நாளில் தன் பணிக்கு திரும்பிய காவலர் கௌரியை ஒடிசா மாநில முதல்வர் முதல் மாநில மக்கள் வரை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

இந்தியாவில் நிலவி வரும் இந்த கொரோனா தடுப்பு காலத்தில் அயராது உழைப்பது மருத்துவத்துறை சார்ந்தவர்களும், காவலர்களும், தூய்மைப் பணியாளர்களும் தான் என சொன்னால் அது மிகையாகாது. இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் ஒடிசா மாநிலம் புரி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் 43 வயதான கௌரி.

காவலர் பணியாற்றும் கௌரியின் மகள் லோபமுத்ரா கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.  கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததால் உடல்நிலை சரியில்லாத தன் குழந்தையின் பக்கத்தில் கௌரியால்  இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தன் கடமையை செவ்வணனே ஆற்றிய கௌரிக்கு வீட்டில் இருந்த வந்த செல்போன் அழைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மகள் லோபமுத்ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உடனடியாக வீட்டிற்கு வருமாறும் கூறியுள்ளனர்.

மகளை பார்க்க வீட்டிற்கு விரைந்த கௌரிக்கு அதிர்ச்சிகரமான நிகழ்வு காத்துக்கொண்டிருந்தது. அம்மா வருவதற்குள் லோபமுத்ராவின் உயிர் இந்த உலகை விட்டு சென்றுவிட்டது. இருப்பினும் தன் ஆசை மகளை பிரிந்த கௌரி இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்த நிகழ்வானது ஒடிசா மாநிலம் முழுவதும் பரவி, அம்மாநில முதல்வரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது. இதுதொடர்பாக ட்வீட் செய்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்,  'காவலர் கௌரியின் மகள் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மகள் இறந்த பிறகும் அவர் தனது கடமையை செய்வதற்கு பணிக்கு திரும்பிய சம்பவம் பாராட்டுக்குரியது. அவரது தியாகம் விலைமதிப்பில்லாதது. அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்' என பாராட்டியுள்ளார்.

இது குறித்து கூறிய கௌரி, என் மகள் என்னுடன் இல்லை என்ற நிஜத்தை இப்பவும் என் மனம் ஏற்க மறுக்கிறது. அவள் இறந்ததை என்னால் ஜீரணித்து கொள்ளமுடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எனது கணவர் என்னை பிரிந்து சென்றார், இப்போது என் மகளும். நான் என் வயதான பெற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட எனது சகோதரனுடன் தான் வசித்து வருகிறேன். மேலும் என் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி செய்யுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்' என கோரிக்கை விடுத்துள்ளார் கௌரி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்