'பெண்ணின் உடலை தகனம் செய்ய வந்தபோது’... ‘பொதுமக்களால் நிகழ்ந்த கொடுமை’... ‘துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில், பெண்ணின் உடலை தகனம் செய்ய வந்த மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் காவலர்களை கிராம மக்கள் கற்களால் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் சைமன் என்ற மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடைய உடலை புதைக்க அந்தப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியது, இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோன்று ஒரு சம்பவம் ஹரியானாவில் நடைபெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்திலுள்ள அம்பாலா என்ற பகுதியில், சந்த்புரா கிராமத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய என தனியாக ஒரு நிலத்தை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மூச்சுத் திணறல் காரணமாக சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள், பெண்ணின் ரத்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் சோதனை முடிவுகள் வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அந்தப் பெண் ஆஸ்துமா காரணமாக உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்த பெண்ணை, பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்றாலும், கொரோனா பாதிப்பு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பாக தகனம் செய்ய முயன்றனர். அப்போது அங்கு கூடிய கிராம மக்கள் தகனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் மீது கற்களைக்கொண்டு தாக்கினர். ஆம்புலன்ஸையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். எனினும் மக்களைச் சமாதானப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக்கூட்டத்தினை கலைத்துள்ளனர். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த தாக்குதலில், ஊரடங்கை மீறி செயல்பட்டது மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தாக்கியது போன்றவற்றிற்காகக் குடியிருப்பில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் ராம் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்