'ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் தான்'... 'மகனை கட்டிப்பிடித்து கதறிய தாய்'... நெஞ்சை உருக வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காணாமல் போன மகன் திரும்பக் கிடைத்த நிலையில் அவனைக் கட்டிப்பிடித்துக் கதறிய தாயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சோம் சோனி. இவன் கடந்த 2015ம் ஆண்டு திடீரென காணாமல் போனான். மகனை இழந்த பெற்றோர் பல இடங்களில் அவனைத் தேடிப் பார்த்தார்கள். ஆனால் சிறுவன் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்ட நிலையில் அவர்களும் தேடிப் பார்த்தார்கள். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தெலுங்கானா போலீசார் அறிமுகம் செய்த டார்பன் மென்பொருள், நாடு முழுவதும் பராமரிப்பு முகாம்களில் உள்ள குழந்தைகள் மற்றும் நபர்களின் தரவுத்தளத்தைப் பராமரித்து வருகிறது. இதன் உதவியுடன், அலகாபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காணாமல் போன 5 வயது சிறுவன் சோம் சோனி, அசாமில் உள்ள குழந்தைகள் நல இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டான். உடனே அங்கு விரைந்த போலீசார் சிறுவனை மீட்டு அவனது பெற்றோரிடம் சேர்த்தார்கள்.

5 வருடங்களுக்கு முன்பு தொலைந்த தனது மகன் திரும்பக் கிடைத்த நிலையில், சிறுவனின் தாய் அவனைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். உன்னைத் தொலைத்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் போலத் தான் இருந்தது என அவர் கதறினார். இந்த காட்சிகளை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் பார்ப்போரை நெகிழ வைக்கும் நிலையில், தொழில்நுட்பம் ஒரு குடும்பத்தையே இணைத்திருப்பது பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்