VIDEO: ‘குவாரண்டைனில் இருந்து தப்பித்த’.. ‘போதை ஆசாமி’ .. நடுரோட்டில் நடந்த பங்கம்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குவாரண்டைனில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரை சுகாதாரத் துறை ஊழியர்களும் காவலர்களும் நடுரோட்டில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மடக்கிப்பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் ஒருவர் குடிபோதையில் கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த காவலர்கள் அவரை அழைத்து விசாரித்தபோது அவர் 3 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து திரும்பி வந்தவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவர் வீட்டில் குவாரண்டைனுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர் என்பது தெரியவந்தது. உடனடியாக காவலர்கள் சுகாதாரத் துறை ஊழியர்களை அழைத்து அவரை மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு உத்தரவிட்டனர்.

ஆனால் சுகாதார ஊழியர்கள் வந்ததைப் பார்த்தவுடன் அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.‌ பாதுகாப்பு உடை அணிந்திருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் நடுரோட்டில் அவரை விரட்டி பிடிக்க முயன்றனர் ஆனாலும் அவர் திமிரி ஓடினார். நான்கைந்து சுகாதார ஊழியர்கள் ஓடி சென்று அந்த போதை ஆசாமியை ஒருவழியாக சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஸ்ட்ரெச்சரில் வைத்து அவருடைய கை கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் போது கீழே விழுந்ததால் அந்த ஆசாமியின் கை கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்போது அந்த குடிபோதை ஆசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 269 தொற்றுநோய்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.‌ வெளிநாடுகளைப் பொறுத்தவரை கொரோனா அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவது என்பது அவசியமாக இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் அதிக சிரமத்தை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்