கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கும் ‘புதிய’ தடுப்பு மருந்து.. யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா நோயாளிகளுக்கு 2 டிஜி மருந்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் ஆகியவை இணைந்து 2 டிஜி என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் கடந்த மே 17-ம் தேதி வெளியிட்டனர்.

இந்த 2 டிஜி மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் 2 முதல் 3 நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை 40 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற தடுப்பு மருந்துகள் ஊசிகள் மூலமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த 2 டிஜி மருந்து பவுடர் வடிவில் சாச்செட் எனப்படும் சிறிய பாக்கெட்டில் கொடுக்கப்படுகிறது.இது வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து அதன் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. 

வரும் வியாழக்கிழமை முதல் இம்மருந்தின் 10,000 பாக்கெட்டுகள் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. 2 டிஜி மருந்தின் ஒரு சாச்செட் ரூ.990-க்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விலை தனியாருக்கு தான் என்றும், மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்று டாக்டர் ரெட்டி ஆய்வகம் கூறியுள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 2 டிஜி மருந்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மருத்துவர்களின் பரிந்துறையின்படி இந்த 2 டிஜி மருந்தினை தரலாம். மிதமான அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை 2டிஜி மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படவில்லை. அதனால் அவர்களுக்கு இம்மருந்தை பரிந்துரைப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்