'தலையில கட்டு போட்டுக்கொள்ளும் டாக்டர்கள்'.. வலுக்கும் போராட்டம்.. மருத்துவமனைகளில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று மேற்கு வங்கத்தில் 75 வயதான முகமது ஷாஹித் என்கிற முதியவர் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்ததை அடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது உறவினர்கள் 200 பேர் மருத்துவமனைக்கு  இரண்டு பெரிய டிராக்டரில் வந்திறங்கி, டாக்டர்களை தாக்கியதாகவும் இதனால் பரிபஹா முகர்ஜி என்கிற பயிற்சி மருத்துவருக்கு பலமாக அடிபட்டதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அடிபட்ட மருத்துவரின் மண்டை ஓடு பாதிக்கப்பட்டதாக வெளியான ஸ்கேன் ரிப்போர்ட் பெரும் சலசலப்பை உருவாக்கியதை அடுத்து, நேற்று முன்தினம், அதே மருத்துவமனையில் பணிபுரியும் சக பயிற்சி மருத்துவர்கள் போராடத் தொடங்கினர். அவர்கள் தங்களது பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதற்கும், காவதுறையினர் தங்கள் மீது தடியடி நடத்துவதற்கும் எதிரான போராட்டத்தைத் தீவிரப் படுத்தினர். இதனால் மேற்குவங்கத்தில் உள்ள பிற மருத்துவர்களும் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்களை மீண்டும் வேலைக்குச் செல்லும்படியும், ஏழை மக்கள் வரும் மருத்துவமனையின் சேவையை நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனாலும் மருத்துவர்கள் அதைக் காதில் வாங்காததால், கொந்தளுத்த மம்தா பானர்ஜி, 4 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் திரும்பவில்லை என்றால் நடக்கும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.

மம்தாவின் இந்த அறிக்கைக்குப் பின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் தற்போது களமிறங்க, இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் போராட்டம் செய்யும் மருத்துவர்கள் தங்கள் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு (அடிபட்ட மருத்துவரை நினைவூட்டும் வகையில்) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மருத்துவர்கள் கட்டுப்போட்டுக்கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்தபடி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டுத் தீர்வு அளிக்க வேண்டும் என்று  அகில இந்திய மருத்துவர்கள் சங்கம்  கோரிக்கை வைத்துள்ளது.

WESTBENGALCLASHES, MAMATABANERJEE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்