"கோவிட் தடுப்பு மருந்தை எடுக்கும்போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்?" - பிரபல மருத்துவர் அ. முகமது ஹக்கீம் விளக்குகிறார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2020 ஆம் ஆண்டில் கொரோனாவினால் ஆட்டி படைக்கப்பட்ட நேரத்தில், 2021 ஆம் ஆண்டின் வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது கோவிட் தடுப்பூசி ஆகும்.

இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததையடுத்து, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கோவிட் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தாலும், தடுப்பூசி செலுத்திய பின்னர், என்னென்ன வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அதிக சந்தேகங்கள் மக்களிடையே உருவாகியுள்ளது.

இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் அ முகமது ஹக்கீம் (அவசர சிகிச்சை நிபுணர்), கோவிட் தடுப்பு மருந்தை எடுக்கும்போது என்னென்ன பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும், யார் எந்த சமயத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்தும் விளக்கியுள்ளார். 'ஒவ்வாமை உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள், ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளவர்கள், நாள்பட்ட நோய் உடையவர்கள் தக்க ஆலோசனை இன்றி தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அதே போல, கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் சில பாதுகாப்பு முறையையும் கையாள வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் பெண்கள் இரு மாதத்திற்கு கர்ப்பம் அடையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதே போல, மது சிகரெட் போன்ற பழக்கம் உடையவர்கள், இரண்டு வாரம் முற்றிலும் அதனைத் தவிர்க்க வேண்டும். அதிக நீர் சத்து உடைய காய்கறி கனி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவிற்கு தினமும் தண்ணீர் பருக வேண்டும். தேவையான அளவிற்கு தினமும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் வேண்டும்.

கொரோனா நோய் RTPCR சோதனையில் பாசிடிவ் முடிவு பெற்றவர்கள், நோயின் அறிகுறிகள் தீரும் வரையில் அல்லது குறைந்தபட்சம் இரண்டு வார காலத்திற்கு ரத்த தானம் செய்யாமல் இருத்தல் வேண்டும். தற்காப்பு முறைகளையும், தடுப்பு மருந்துகளையும் பாதுகாப்பாக கையாண்டு நாமும் பிறரும் இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்பாய் இருப்போம்' என கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் வழிமுறைகள் குறித்து மருத்துவர் அ முகமது ஹக்கீம் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்