"அவங்கள உடனே காப்பாத்தணும்"... 'அயர்லாந்தில்' இருந்து வந்த 'போன்' கால்... உடனடியாக களம் கண்ட 50 'போலீஸ்'... பரபரப்பை கிளப்பிய இறுதி 'நிமிடங்கள்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த சனிக்கிழமையன்று, இரவு 8 மணியளவில் டெல்லி சைபர் க்ரைம் இணை கண்காணிப்பாளர் ராய் என்பவருக்கு அயர்லாந்தில் பணியாற்றும் ஃபேஸ்புக் ஊழியரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பில் பேசிய அயர்லாந்து ஃபேஸ்புக் ஊழியர், டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்கான முயற்சியில் இருப்பதாக எங்களுக்கு முன்னெச்சரிக்கை சாதனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். அதோடு அந்த பெண்ணின் ஐடி குறித்த விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மொபைல் எண்ணைக் கொண்டு பெண்ணின் முகவரியை கண்டுபிடித்த சைபர் க்ரைம் துறை, ஒரு போலீஸ் குழுவை பெண்ணின் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது அந்த பெண் மிகவும் சாதாரணமாக இருந்த நிலையில், அவர் தற்கொலை செய்வதற்கான எந்த முயற்சிகளை மேற்கொண்டது போல தெரியவில்லை. தொடர்ந்து, அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்திய போது, அவருடைய ஃபேஸ்புக் கணக்கை அவரது கணவர் பயன்படுத்தி வருவதாகவும், அவர் தற்போது மும்பையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணிற்கு தனது கணவர் மும்பையில் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. கணவரின் மொபைல் எண்ணை மட்டும் போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக, இணைக்கண்காணிப்பாளர் ராய், மும்பை சைபர் க்ரைம் இணை கண்காணிப்பாளருக்கு இது தொடர்பாக தகவலை தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர் குறித்த விவரத்தையும் அளித்துள்ளார். மொபைல் எண்ணைக் கொண்டு அந்த பெண்ணின் கணவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்கொலை எண்ணத்தில் இருந்த அந்த நபரை போலீசார் மீட்டுள்ளனர்.

முன்னதாக, அந்த நபர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாகவும், மேலும் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவருக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. பண பிரச்சனையில் குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என நினைத்து வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக தான் ஃபேஸ்புக் பக்கங்களில் அதிகம் தற்கொலை எண்ணங்கள் தொடர்பாக பதிவை போட்டு வந்துள்ளார். தொடர்ந்து தற்கொலை செய்வதற்கான முடிவையும் எடுத்துள்ளார்.

சரியான நேரத்தில் கிடைத்த எச்சரிக்கையுடன் போலீசாரும் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக ஒருவரை  தற்கொலை எண்ணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்