‘கொரோனாவுடன்’... ‘இந்த மாதிரி விஷயங்களையும்’... ‘எதிர்த்து போராட வேண்டியுள்ளது’... ‘மிரட்டலால் வருந்த வைத்த சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவப் பணியாளர்களைப் பாதுக்காக்க அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட அடுத்த நாளே டெல்லியில் மீண்டும் மருத்துவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பணியில் இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கபட்டது. இந்நிலையில், சிறிது நேரம் காத்திருக்க சொன்னதற்காகச் சிலர் தங்களைத் தாக்கியதாகவும், மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும் டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் வேதனையுடன் கூறியுள்ளளனர்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மருத்துவர்கள், ‘நாங்கள் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி நேரம் பணி செய்கிறோம். நாங்கள் கொரோனா வார்டுகளுக்கு பலரை செக் செய்து அனுப்புகிறோம். ஆனால், இன்று மருத்துவமனைக் கட்டடத்தின் வெளியே ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது. ஆம்புலன்ஸ் ஒன்று, ஒரு நோயாளி மற்றும் இருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது.

அவர்கள் வந்த நேரம், மருத்துவர்கள் அனைவரும் வேறு நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். அதனால், புதிதாக வந்தவர்களைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னதால், பொறுமை இழந்த அவர்கள், மருத்துவர்களிடம் சென்று, தங்கள் மாஸ்க்களை கழற்றிவிட்டு, மருத்துவருக்கு மிக நெருக்கமாக வந்தனர். மருத்துவர், அவர்களிடம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொன்னபோது, அவர்கள் சத்தம் போட்டுக்கொண்டே, `எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், உங்களுக்கும் பரப்பிவிடுவோம்’ என்று மிரட்டினார்கள்’ என்றனர். 

மேலும், ‘மருத்துவர்கள் அவர்களைத் தள்ளி நிற்கச் சொல்லும்போது, ஆக்ரோஷமாகத் தாக்க ஆரம்பித்தனர். மருத்துவரை தாக்கியது பெண் என்பதால், அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை அழைத்தோம். அப்போது மற்றொருவர், பெண் காவலரின் கழுத்தைப் பிடித்து தள்ளினார். மேலும், மோசமான வார்த்தைகளால் திட்டினர். மற்ற காவலர்களையும் அவர்கள் மோசமாகக் கையாண்டனர். நாங்கள் கொரோனாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், இது போன்ற நபர்களுக்கு எதிராகவும் போராடும் நிலையில் இருக்கிறோம்.

எங்கள் மருத்துவமனை கொரோனா தடுப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், வேலையைச் செய்வது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிடும்’ என்றனர். அயராது உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்