'கலவர பூமியான தலைநகரம்...' 'துப்பாக்கி சூடு, வாகனங்கள் எரிப்பு, இன்னும்...' வன்முறையில் 20 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக டெல்லியில் வடகிழக்கு பகுதிகளில் பயங்கர கலவரம் வெடித்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது இருப்பதாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 18 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கலவரத்தினால் ஏற்பட்ட பாதிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி காவல்துறையினரால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது என்றும் கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வன்முறை ஏற்படும் சூழல் உள்ள பிற பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும்,  ஆதரவாகவும்  போராட்டம் நடத்திய இரு குழுக்களுக்கிடையே  மோதல் ஏற்பட்டு  கலவரம் வெடித்தது. இரு தரப்பிலும் கற்களை கொண்டு வீசி  தாக்குதல் நடத்தினர். அருகிலுள்ள வாகனங்கள், ஆட்டோக்கள், சைக்கிள்களுக்கும்  தீ வைக்கப்பட்டது.

இந்த வன்முறையால் வடகிழக்கு  டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர், பஜன்புரா மற்றும் சாந்த்பாக் பகுதிகள்  போர்களம் போன்று காட்சியளித்தன. எங்கு பார்த்தாலும் சாலையில் கற்கள் சிதறி  கிடந்தன. வழியில் நிற்கும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து எரித்தும் வன்முறையில் ஈடுபட்டனர். கலவரத்தில் சாந்த்பாக்கில் டெல்லி போலீசை சேர்ந்த ரத்தன்  லால் என்கிற தலைமை காவலர் உட்பட நேற்றுமுன்தினம் 5 பேர் இந்தக் கலவரத்தில் பலியானார்கள். 

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வடகிழக்கு டெல்லியின் 10க்கும் மேற்பட்ட  பகுதிகளில் மார்ச் 24ம் தேதி வரை போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில்,  நேற்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது. மவுஜ்பூர் பகுதியில் உள்ள  கடைகளுக்குள் சென்ற கும்பல் ஒன்று கடைகளை மூடுமாறு கூறி அச்சுறுத்தியது.  இதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. கற்கள் வீசி தாக்குதல்  நடத்தப்பட்டதோடு, அங்கிருந்த கடைகள், மசூதிகள் சூறையாடப்பட்டது. பஜன்புரா,  சந்த்பாக், காராவால்நகர் பகுதியில் அதிக அளவில் வன்முறை நடந்தது. மஜ்பூர்,  பாபர்பூர், விஜய்பார்க், யமுனா விகார் பகுதிகளிலும் வன்முறை பரவியது. சிஏஏ  எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேருக்கு நேர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.

இந்த மோதல் முற்றிய நிலையில், இருதரப்பினரும்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். சந்த்பாக் பகுதியில் கடைகள் கொளுத்தப்பட்டன.  கோகுல்புரி பகுதியில் டயர் மார்க்கெட் தீ வைத்து எரிக்கப்பட்டது. கையில்  இரும்பு கம்பி, கம்புகளுடன் வீதிவீதியாக வந்த கும்பல் இந்த வன்முறையில்  ஈடுபட்டது. இதை தடுக்க போலீஸ் படையினரால் முடியவில்லை. கோகுல்புரியில் இரண்டு  தீயணைப்பு வண்டிகள் எரிக்கப்பட்டன. பைக் ஷோரூம் கொளுத்தப்பட்டது. அதில்  இருந்த பைக்குகள் பற்றி எரிந்தன. மாலையிலும் சாந்த்பாக் பகுதியில் கலவரம்  ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் பல இடங்களில்  வன்முறை பரவியது.

இருதரப்பினரும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானோர்  எண்ணிக்கை 20 ஆக தற்போது உயர்ந்துள்ளது. 48 போலீசார் உள்பட 150க்கும் மேற்பட்டோர் காயம்  அடைந்தனர். இதில் 70 பேர் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. தலைநகரில் நடக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

VIOLENCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்