மம்தா பானர்ஜியின் கட்சியில் இணைந்த ‘பிரபல’ கிரிக்கெட் வீரர்.. வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறக்க திட்டமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, சமீப காலமாக இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம்பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். அதனால் அரசியல் பக்கம் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார். குறிப்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மனோஜ் திவாரி குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா கருத்து தெரிவித்தபோது, மற்ற பிரபலங்கள் அரசுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவிக்க, அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்த ஒரு சில பிரபலங்களில் மனோஜ் திவாரியும் ஒருவர். அதேபோல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

மனோஜ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல் இதுவரை பார்த்திராத வகையில் பிரமாதமான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறது. இந்த கடினமான சூழலிலும் கச்சிதமாக விளாசப்பட்ட சதம் இது. முதல் பந்தில் இருந்தே பெரிய இன்னிங்ஸை தொடும் என எதிர்பார்த்தோம். பெட்ரோலுக்கு டீசல் அளித்துள்ள பார்ட்னர்ஷிப்பும் அபாரம். சாமானிய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல. ஆனால், நீங்கள் (பெட்ரோல், டீசல்) இருவருமே அதை சாத்தியப்படுத்தி இருக்கிறீர்கள்’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், மம்தா பானர்ஜி முன்னிலையில் மனோஜ் திவாரி இன்று இணைந்துள்ளார்.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு புதிய பயணம் இன்று முதல் தொடங்குகிறது. உங்கள் அன்பும் ஆதரவும் தேவை’ என பகிர்ந்துள்ளார். அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவில், ‘அரசியல்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பெருமைமிகு இந்தியன், ஜெய் பங்களா’ என மனோஜ் திவாரி குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மனோஜ் திவாரியை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்