ஒரே மாசத்துல மக்கள் இப்டி 'தலைகீழா' மாறிட்டாங்க... அப்போ இனி 'இந்தியாவோட' வளர்ச்சியை... யாராலயும் தடுக்க முடியாது போல!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் மக்களின் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து 'எனார்மஸ் பிராண்ட்ஸ்' என்னும் நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முக்கியமான நகரங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது. அதன் முடிவுகள் குறித்து கீழே காணலாம்:-

* பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, மக்களின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

* சீனாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களை விட இந்தியாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விலை கொடுக்க தயார் என 47 சதவீத இந்திய மக்கள் தெரிவித்துள்ளனர். சீன பொருட்கள் விலை மலிவாக இருந்தாலும்கூட, உலகளவிலான உற்பத்தியாளராக சீனா தன்னை நிலைநிறுத்துவதற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்றும் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* 55-65 வயதான முதியோர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது 47 சதவீதம் அதிகரித்துள்ளது. பால், மளிகைப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் பணம் செலுத்தி, வாங்குவதில் ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.

* 10 ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள் ஆன்லைன் வங்கி பண பரிமாற்ற நடவடிக்கையை ஊக்குவித்து வந்தாலும்கூட, ஒரே மாதத்தில் (கடந்த மாதத்தில்) 28 சதவீதம் பேர் முதன்முதலாக ஆன்லைன் வங்கி பண பரிமாற்ற முறைக்கு வந்துள்ளனர். 33 சதவீதம்பேர் 35-50 வயது பிரிவினர் ஆவர்.

* ஊரடங்கால் 74 சதவீதம் பேர் தாங்கள் தினந்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை தவற விட்டு இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். அதே நேரத்தில், மீண்டும் அந்தப் பழக்கத்தை தொடர காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 29 சதவீதம் பேர் ஆன்லைனில் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர்.

* இந்தியா வர்த்தகத்துக்கு ஏற்ற நாடாக மாறும் என 58 சதவீதம்பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* இன்னும் ஓராண்டு காலத்தில் பங்குச்சந்தை எழுச்சி பெறும். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை எட்டிப்பிடிக்கும் என 44 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் 2 ஆண்டுகளுக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்றும் கூறுகின்றனர்.

* இணையதளம் வழியாக வழங்கப்படுகிற ஓ.டி.டி. சேவையை விட டெலிவிஷன்தான் மக்களிடையே வரவேற்பை பெற்று மின்னுகிறது. உயர் வருவாய் பிரிவினர் 43 சதவீதம்பேர் தங்களது முக்கிய பொழுதுபோக்கு கேபிள் டி.வி.தான் என கூறி இருக்கிறார்கள். டி.வி. பார்க்கும் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் செய்தி சேனல்களில் நேரம் செலவிடுகின்றனர். 43 சதவீதம் பேர், செய்தி சேனல்கள் ஒருபக்கம் சார்பான செய்தி தருவதில்லை என கூறி உள்ளனர். 27 சதவீதம் பேர் சில செய்தி சேனல்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

* எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவை கையாள்வதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுவதாகவும், அவர் உலக தலைவராக திகழ்வதாகவும் பலரும் பாராட்டி இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்