VIDEO: ‘இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது’.. கொதித்த ‘ஜெகன்மோகன்’.. ஆந்திராவை அதிரவைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 70 வயதான முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி அடக்கம் செய்வதற்காக ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு சென்றுள்ளனர். உடல்களை கொண்டு செல்பவர்கள் மட்டும் பாதுகாப்பான PPE கவசங்களை அணிந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ பார்த்த ஆந்திர முதல்வர் அலுவலக அதிகாரிகள், உடனே ஸ்ரீகாகுள மாவட்ட ஆட்சித்தலைவரை தொடர்புகொண்டு கண்டித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், ஸ்ரீகாகுளம் நகராட்சி ஆணையர் பி.நாகேந்திரகுமார் மற்றும் சுகாதார அதிகாரி என்.ராஜீவை பணியிடை நீக்கம் செய்தார்.

இந்த சம்பவ தொடர்பாக ட்வீட் செய்த அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘கொரோனா நோயால் இறந்தவர் உடலை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கொரோனா நோயால் இறந்தவர்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டியது நமது கடமை’ என பதிவிட்டிருந்தார். கடந்த 24ம் தேதி கொரோனாவால் இறந்த பெண்ணை டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்